#JUST IN: "பாஜக எங்களை மிரட்டப் பார்க்கிறது" - தவெக அருண்ராஜ் பேட்டி
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜிடம், "தவெக ஏன் பாஜகவை விமர்சிப்பதில்லை?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "எங்கள் கட்சித் தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டிலேயே பாஜகவை எங்களது கொள்கை எதிரி எனத் தெளிவாக அறிவித்துவிட்டார். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் தொடர்ந்து பாஜகவை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்."
"ஆரம்பத்தில் எந்த அழுத்தமும் இல்லை. ஆனால், தற்போது மத்திய பாஜக அரசு சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் மூலம் எங்களுக்கு அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் எங்களை மிரட்டப் பார்க்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் தேர்தல் களம் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இடையிலானது மட்டுமே எனத் தெரிவித்த அருண்ராஜ், "தற்போது ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்துத்தான் நாங்கள் அரசியல் செய்வோம். இந்தப் 'பயங்கரவாத' சக்தியை (ஆளும் தரப்பைக் குறிப்பிட்டு) வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்" என்றார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும், ஆனால் தமிழக அரசு இந்தக் கூட்டங்களுக்குப் பல்வேறு தடைகளை விதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, ஆனால் நாங்கள் மக்கள் மன்றத்திற்குச் சென்று எங்கள் கருத்துகளைக் கண்டிப்பாகச் சொல்வோம்" என்று அவர் உறுதியளித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அருண்ராஜின் இந்தப் பேட்டி பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிரான தவெகவின் போக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!