கனிமொழி தலைமையில் அனல் பறக்கும் கூட்டம்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை மின்னல் வேகத்தில் வகுக்கத் தொடங்கி விட்டது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் 'தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு'வின் முதல் ஆலோசனைக் கூட்டம், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தொடங்கியது.
இந்தக் குழுவை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் நவீன சிந்தனை கொண்ட இளம் அமைச்சர்கள் என ஒரு பக்கா 'மிஸ்' கலவையாக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்பி.ராஜா மற்றும் மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட 12 முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் பயணத் திட்டங்கள் குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக் குழு வெறும் அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கப்போவதில்லை; மாறாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்கப் போகிறார்கள். அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் உள்வாங்கி, ஒரு 'பக்கா' தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வதே கனிமொழி தலைமையிலான இந்தக் குழுவின் முக்கிய இலக்காகும்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' மற்றும் 'ஓரணியில் தமிழ்நாடு' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தொகுதிகளை ஆய்வு செய்து வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் இந்தச் செயல்பாடு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் திமுக, 2026-க்காக எந்த மாதிரியான அதிரடித் திட்டங்களைக் கையில் எடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!