கார்த்திகை தீபத் திருவிழா... அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!
தமிழர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கிவிட்ட நிலையில், திருச்சி, திருவானைக்காவல் உட்பட பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்தப் பண்டிகையின்போது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக, மண்பாண்டத் தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஒரு மாத காலமாகவே அகல் விளக்குகள் தயாரிப்பை உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். பாரம்பரியத்தைக் காக்கும் நோக்குடன், மண்ணில் பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகளை இவர்கள் உற்பத்தி செய்கின்றனர். சிறியது முதல் பெரியது வரையிலான சாதாரண அகல் விளக்குகள், ஐந்தின் முக குத்துவிளக்குகள் போன்ற கலைநயம் மிகுந்த வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்குப் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழிலானது, மண்ணின் மூலக்கூறு மற்றும் சூரிய ஒளியைச் சார்ந்து உள்ளது. ஆனால், தற்போது உற்பத்தியாளர்கள் சந்திக்கும் முக்கியச் சவால், வானிலை மாற்றம்தான்.
"கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், மண் விளக்குகளை முறையாகக் காய வைத்து, சூளையில் வைத்துச் சுடுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. வெயில் வரும்போது மட்டுமே காயவைத்து விளக்குகளைத் தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது" என்று உற்பத்தியாளர்கள் குமுறுகின்றனர். உற்பத்தியாளர்கள் தங்கள் பாரம்பரியத் தொழிலைத் தொடர்வதற்குப் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
மண் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், ஆட்கள் கூலி உயர்வு, மற்றும் சமீப காலமாக உலோக விளக்குகள் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே அகல் விளக்குகள் உற்பத்தி குறைந்து, தொழில் நலிவடைந்து வருகிறது.
"எவ்வளவு சிரமம் வந்தாலும், பாரம்பரியத்தை விடக்கூடாது என்ற நோக்கத்தோடு இந்தக் கார்த்திகை தீபத்திற்காகத் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று உற்பத்தியாளர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!