நினைத்த காரியங்களை நிறைவேற்றும் கார்த்திகை சஷ்டி விரதம்... வழிபடும் முறைகளும், பலன்களும்!

 

தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானை மனமுருகி வணங்கினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களிடையே இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக, இந்தக் கார்த்திகை மாதம் என்பது முருகனுக்கு உகந்த மிக அற்புதமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதி, மிகவும் உன்னதமானது. எனவே, இன்று அனுசரிக்கப்படும் கார்த்திகை சஷ்டி விரதத்தை எப்படி அனுசரித்து, சகல செல்வங்களையும் முருகப் பெருமானிடம் இருந்து பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

கார்த்திகை மாதமே முருகப் பெருமானைக் குறிக்கும் புண்ணிய மாதமாகும். இன்று வரும் சஷ்டி விரத நாளில், முருகனின் அருளை வேண்டி விரதம் இருந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அத்துடன், திருமண வரம் கைகூடும், கேட்கும் வரங்களை எல்லாம் கந்தப் பெருமான் அள்ளித் தருவார் என்று நம்பப்படுகிறது. பொதுவாகவே, முருகனுக்குரிய கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து, அறுபடை வீடுகளுக்குப் பாதயாத்திரை மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது. எனவே, இந்தக் காலத்தில் சிறிய முருகன் கோவில்களில்கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம்.

இந்தச் சஷ்டி விரதத்தை அனுசரிக்கும் முறை என்பது எளிமையானது. பெரும்பாலும், சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கேயே தங்கி விரதத்தை மேற்கொள்வது உண்டு. அவ்வாறு விரதம் இருப்பவர்கள், அருகிலுள்ள நீர் நிலைகள், ஆறு அல்லது கடல் ஆகியவற்றில் நீராடி விரதத்தைத் தொடங்குவது மரபு. விரதம் இருப்பவர்கள் தங்கள் இல்லங்களில் காலையும் மாலையும் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதன் மூலம் முருகனின் அருளைப் பெறலாம். வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள், ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.

சஷ்டி விரதம் என்பது குழந்தை வரம் பெறுவதற்காக மட்டுமே அனுசரிக்கப்படுகிறது என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால், அதுமட்டுமல்ல! குழந்தை பாக்கியம் தவிர, நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், உடல் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் எனப் பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்காகவும் இந்தச் சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம். பல்வேறு செல்வங்களை அள்ளித் தரும் வல்லமை கொண்ட முருகப் பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் மிக ஏற்ற நாளாகும். நம்பிக்கையோடு முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகையான செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார் என்பது பக்தர்களின் அனுபவமாகும்.

விரத நேரத்தில், பக்தர்கள் தினமும் தவறாமல் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். அத்துடன், முருகனின் மந்திரங்களைச் சொல்லிப் பாராயணம் செய்தல், கந்தனின் திருவிளையாடல் கதைகளைப் படித்தல் ஆகியவை மிகவும் நல்லது. ஆன்மிக அனுஷ்டானங்களுடன் சேர்த்து, இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவுவது போன்ற நல்ல காரியங்களைச் செய்திடல் மூலமாகவும் முருகனின் அருளைப் பெறலாம். கவலைகள் அனைத்தையும் போக்கும் கந்தகுருவை நாம் வேண்டி வணங்குவதன் மூலம், வேதனைகளையெல்லாம் அந்த ஞானக்குமரன் போக்கியருளுவார். கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன்; வீடு மனை யோகம் அளித்திடுவான்; செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான்; திருமண பாக்கியத்தையும் கொடுத்திடுவான்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!