கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு... தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரின் கால் முறிந்தது!
நாகர்கோவிலில் திருவிழாவுக்கு வந்த மத்தியப் பிரதேச தம்பதியின் குழந்தையைத் திருடிச் சென்ற ஆட்டோ டிரைவர், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின்போது, பிடிபடாமல் தப்பி ஓட முயன்றபோது கால் முறிந்து பிடிபட்டார். கடத்தப்பட்ட குழந்தை சுமார் 4 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது.
மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த தம்பதி, 3 குழந்தைகளுடன் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத் திருவிழாவுக்கு வந்து பலூன் வியாபாரம் செய்து வந்தனர். கடந்த 6ம் தேதி இரவு சொந்த ஊர் செல்ல நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையம் அருகே குழந்தைகளுடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அன்பாகப் பேசி குழந்தைக்குச் சாப்பாடு வாங்கித் தருவதாகக் கூறி ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்றார். ஒரு மணி நேரமாகியும் அவர் திரும்ப வராததால், பெற்றோர்கள் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணையில், குழந்தையைக் கடத்தியது கோட்டார் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்றும், அவர் பார்வதிபுரம் அருகே இறச்சக்குளம் – ஆலம்பாறை ரோட்டில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இரவில் காட்டுப் பகுதியில் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, யோகேஷ்குமாரின் ஆட்டோவைக் கண்டுபிடித்தனர். ஆட்டோவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீட்கப்பட்டது. போலீசாரைக் கண்டதும் யோகேஷ்குமார் தப்பி ஓட முயன்ற போது, அவரது கால் முறிந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை 4 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாரை அனைவரும் பாராட்டினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!