குர்குரே வாங்க காசு தராமல் அடித்த பெற்றோர்... 100-க்கு போன் செய்து போலீசாரை வரவழைத்த 8 வயது சிறுவன்!
மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில், 8 வயது சிறுவன் ஒருவன் தனது உரிமைகளுக்காகப் போலீஸாரை நாடிய வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிற்றுண்டி (குர்குரே) வாங்குவதற்காகத் தனது தாயிடம் 20 ரூபாய் பணம் கேட்டுள்ளான் அந்தச் சிறுவன். தாய் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தாயும், சகோதரியும் சேர்ந்து அந்தச் சிறுவனை ஒரு இடத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டினரின் இந்த வன்முறையால் அச்சமடைந்த சிறுவன், சற்றும் யோசிக்காமல் தனது தற்காப்பிற்காகக் காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-ஐத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளான். ஒரு சிறுவன் அழுதுகொண்டே உதவி கோரியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக அவன் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சிறுவன் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையைச் சுட்டிக்காட்டி, அவனது தாய் மற்றும் சகோதரியைக் கடுமையாக எச்சரித்ததோடு, குழந்தைகளைத் தண்டிப்பது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அழுது கொண்டிருந்த சிறுவனைச் சமாதானப்படுத்திய போலீஸார், அவனுக்குப் பிடித்தமான குர்குரே பாக்கெட்டுகளைத் தங்களது கைக்காசில் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
8 வயதிலேயே தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகச் சட்ட உதவியை நாடலாம் என்ற விழிப்புணர்வு அந்தச் சிறுவனுக்கு இருந்தது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இச்சம்பவம், இன்றைய காலத்துக் குழந்தைகள் தங்களது உரிமைகளில் எவ்வளவுத் தெளிவாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதோடு, பெற்றோர்கள் வன்முறையைத் தவிர்த்துப் புரிதலுடன் அணுக வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!