30000 ஊழியர்கள் பணிநீக்கம்... ஆரக்கிள் திடீர் முடிவால் இந்தியாவில் 12,000 பேர் வேலை இழப்பு!
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் , தனது செலவினங்களைக் குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உலகம் முழுவதும் சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் இந்தியப் பிரிவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் (சுமார் 30,000 பேர்) ஏறத்தாழ 40 சதவீதமாகும்.
AI உள்கட்டமைப்பு முதலீடு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்க நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இந்த முதலீடுகளுக்கான நிதியைத் திரட்டவே இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகச் சீரமைப்பு: செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், தேவையற்ற பணியிடங்களை நீக்கவும் இந்த 'மறுசீரமைப்பு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரக்கிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடன் மற்றும் நிதி அழுத்தம்: நிறுவனத்தின் மீதான கடன் சுமையைக் குறைக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் (சுமார் 8-10 பில்லியன் டாலர் வரை சேமிக்கத் திட்டம்) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஊழியர்கள் அதிகாலையிலேயே தங்களது வேலை பறிபோன செய்தியை மின்னஞ்சல் மூலம் அறிந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையும் , நோட்டீஸ் காலத்திற்கான ஊதியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கட்டப் பணிநீக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதால், எஞ்சியுள்ள ஊழியர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது ஆரக்கிள் நிறுவனமும் AI-க்காகப் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை நீக்கியிருப்பது ஐடி துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!