எகிறும்  எலுமிச்சை ...  கோடை தொடங்கும் முன்பே கொளுத்தும் விலை!  

 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான பானங்களுக்கு மவுசு கூடியுள்ளது. ஆனால், இதற்கு மிக முக்கியத் தேவையான எலுமிச்சைப் பழத்தின் விலை தற்போது சாமானிய மக்களை அதிர வைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தின் 'எலுமிச்சை நகரம்' என்று அழைக்கப்படும் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு எலுமிச்சை விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு நிலவும் கடும் கோடை வெப்பம் மற்றும் திடீர் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை மரங்களில் பூக்கள் கருகி, பிஞ்சு பிடிக்கும் முன்பே உதிர்ந்து வருகின்றன. இதனால் விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளதோடு, மார்க்கெட்டிற்கு வரும் எலுமிச்சை மூட்டைகளின் எண்ணிக்கையும் பெருமளவு சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்ற எலுமிச்சை, தற்போது தரம் மற்றும் அளவைப் பொறுத்து ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு சிறிய அளவிலான எலுமிச்சை பழமே 7 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விளைச்சல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, சபரிமலை சீசன் மற்றும் சுப முகூர்த்த தினங்கள் முடிந்து கோடை தாகம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சைக்கான தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்துள்ளதால், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதன் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். "விலை அதிகமாக இருந்தாலும் தரம் குறைவாகவே உள்ளது" என நுகர்வோர் வேதனை தெரிவிக்கும் நிலையில், எலுமிச்சையின் விலை உயர்வு ஜூஸ் கடைகள் மற்றும் உணவகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!