"ரூ.518 கோடி மது விற்பனை சாதனையா? வேதனையா?" - அன்புமணி ஆவேசம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நடைபெற்ற மது விற்பனை புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்கள் நலனை விட மது வணிகத்தைப் பெருக்குவதிலேயே அரசு குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகை அன்று ரூ.217 கோடிக்கும், பொங்கல் அன்று ரூ.301 கோடிக்கும் என மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மது விற்பனை 14.10% அதிகரித்துள்ளது. இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை (11.19%) விட அதிகம் என்பது கவலைக்குரியது.
நான்கு நாட்களில் மது விற்பனை ரூ.900 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக அரசு வழங்கிய பணத்தை மீண்டும் மதுவின் மூலம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
திமுக அரசு 500 கடைகளை மூடியதாகக் கூறினாலும், அதற்குப் பதிலாக 19% கூடுதலாக மது விற்பனை செய்யும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"ஸ்டாலின் தலைமையிலான அரசு மதுவிலக்கை நோக்கிப் பயணிக்காமல், மதுப் பெருக்கத்தை நோக்கிப் பயணிக்கிறது" என்று அன்புமணி தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!