குட் நியூஸ்... சொகுசு கார்கள் இறக்குமதி வரி 40% ஆகக் குறைப்பு... நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் ஒரு புதிய புரட்சி ஏற்படப் போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியைக் கணிசமாகக் குறைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு இடையே நாளை கையெழுத்தாக உள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்தியா சுமார் 110 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய கார்களின் விலை இந்தியாவில் பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) ஒரு பகுதியாக, இந்த வரியை உடனடியாக 40 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வரி குறைப்பு, சுமார் 16.3 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள கார்களுக்குப் பொருந்தும். மேலும், வரும் ஆண்டுகளில் இந்த வரியைப் படிப்படியாக 10 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவால் ஐரோப்பாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), வோக்ஸ்வாகன் (Volkswagen), ஆடி (Audi) போன்ற நிறுவனங்கள் பெரும் பலன் அடைய உள்ளன. வரிக்க குறைப்பால் இந்தக் கார்களின் விற்பனை விலை இந்தியாவில் பல லட்சங்கள் குறைய வாய்ப்புள்ளது, இது சொகுசு கார் பிரியர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இவர்கள், நாளை பிரதமர் மோடியுடன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளனர்.
அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கைகளால் உலகளாவிய வர்த்தகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் வாகனத் துறை மட்டுமல்லாது, ஜவுளி, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!