பிரபல எழுத்தாளர் மதன கல்யாணி காலமானார்... செவாலியே விருது பெற்ற முதல் தமிழர்!

 

செவாலியே விருது பெற்ற முதல் தமிழரான எழுத்தாளர் மதன கல்யாணி இன்று காலமானார். அவருக்கு வயது 84. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 3 மகன்கள். சிவாஜி கணேசன், கமலுக்கு முன்பே இவர் செவாலியே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் புதுச்சேரியில் பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்த மதன கல்யாணி, கடந்த 2009 ல் புதுச்சேரியில் கலைமாமணி விருது பெற்றவர். 2002ல் செவாலியே விருது பெற்றதுடன் பிரெஞ்சு அரசின் உயரிய விருதான ஒஃபிஸியே விருதையும் 2011ல் பெற்றார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த விருதுகளை முதலில் பெற்ற பெண்மணி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியரின்  'லா பெஸ்த்' நாவலை 'கொள்ளை நோய்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்தவர். அத்துடன் பிரெஞ்சு நாவலாசிரியர் பல்சாக் படைப்பான 'லு பெர் கொர்யோ' என்ற நாவலை 'தந்தை கொரியோ' என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

 எழுத்தாளர் சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவலை பிரெஞ்சில் மொழி பெயர்த்து உலகளாவிய பாராட்டுக்களை பெற்றார்.  புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்ச் ஆகிய இருமொழிகளிலும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.  

சிறுவர்களுக்காக சிலப்பதிகார நூலின் சுருக்கத்தைப் படங்களுடன் வெளியிட்டார். கோதலூப், மொரீசியஸ், ரீயூனியன் தீவுகளில் பிரெஞ்சு பேசும் தமிழ்மொழி அறியாத தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மாரியம்மன் தாலாட்டு, மதுரைவீரன் அலங்காரச் சிந்து முதலியவற்றை இசையோடு ஆனால் பொருள் தெரியாமல் பாடி வந்தனர். அவர்களுக்காக பிரெஞ்சு மொழியில் இரண்டு நூல்களை எழுதினார்.  பிரெஞ்சு கவிதைகளைத் தமிழில் 'தூறல்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள், எழுத்தாளர்கள், சக இலக்கிய ஆளுமைகள், திரைத்துறையினர் , நாட்டுப்புறகலைஞர்கள், இவரின் வாசகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!