மகர சங்கராந்தி.. கங்கையில் ஒரே நாளில் 21 லட்சம் பேர் புனித நீராடல்.. இன்றிரவுக்குள் ஒரு கோடி பேர் திரள வாய்ப்பு!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 'மகாமேளா' திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகர சங்கராந்தி புனித நீராடல் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை மற்றும் அந்தர்வாகினியாகப் பாயும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமத்தில்' மகர சங்கராந்தி புனித நீராடல் இன்று அதிகாலை முதலே தொடங்கியது. இன்று அதிகாலை நள்ளிரவு முதல் காலை 8 மணி வரையிலான இடைவெளியில் மட்டும் சுமார் 21 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கையை வழிபட்டனர்.
கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கிய இந்த மகாமேளா, பிப்ரவரி 15ம் தேதி மகா சிவராத்திரி வரை மொத்தம் 44 நாட்கள் நடைபெறுகிறது. மகர சங்கராந்தியான இன்று மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மவுனி அமாவாசை (ஜனவரி 18), வசந்த பஞ்சமி (ஜனவரி 23) ஆகிய நாட்களிலும் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதால், பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேளா பகுதி முழுவதும் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. நதிக்கரையில் நூற்றுக்கணக்கான தற்காலிகக் குளியல் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு முடிவதற்குள் கங்கை நதியில் புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!