தூக்க கலக்கத்தில் 10-வது மாடியில் இருந்து விழுந்த நபர்... ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர் தப்பிய மிராக்கிள்!
குஜராத் மாநிலம் சூரத்தில் தூக்கத்தில் புரண்டு படுத்தபோது 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர், 8-வது மாடி ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி, நூலிழையில் உயிர் தப்பிய அதிசயச் சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.
சூரத் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் இன்று தனது வீட்டின் 10-வது மாடியில் உள்ள ஜன்னல் ஓரமாக இருந்த குறுகிய இடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர், எதிர்பாராத விதமாகத் தனது நிலையில் இருந்து உருண்டு ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தார்.
10-வது மாடியில் இருந்து கீழே விழுந்தவர் தரைமட்டத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழும் வழியில், 8-வது மாடியில் வெளிப்புறமாகப் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார். தலைகீழாக அந்த அந்தரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், ஜன்னல் கம்பியில் சிக்கியிருந்த நிதினை மிகவும் லாவகமாக மீட்டனர். முதலில் பாதுகாப்புக் கயிறுகள் மூலம் அவர் கட்டப்பட்டார். பின்னர் கிரில் கம்பிகள் மெதுவாக விலக்கப்பட்டு, அவர் பத்திரமாகத் தூக்கி எடுக்கப்பட்டார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் அந்தரத்தில் மரணப் போராட்டம் நடத்திய அவர் மீட்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி உற்சாகம் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட நிதின் ஆதியா உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!