மாம்பழப் பிரியர்களுக்கு 'ஷாக்'... இந்த ஆண்டு சீசன் தாமதம்!
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தின் வரவுக்காகத் தவம் இருக்கும் தமிழக மக்களுக்கு, இந்த ஆண்டு ஒரு கசப்பான செய்தி கிடைத்துள்ளது. வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை வரை களைகட்டும் மாம்பழ சீசன், இந்த ஆண்டு மந்தமாகவே தொடங்கியுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட முக்கிய மா சாகுபடி மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக இப்போதுதான் மாமரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனால் சந்தைக்கு மாம்பழங்கள் வருவது கணிசமாகத் தாமதமாகும் எனத் தெரிகிறது. "இந்த ஆண்டு மாம்பழத்தைச் சுவைக்க இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும்" என வியாபாரிகள் கை விரிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நுகர்வு போக மீதமுள்ளவை மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தும், சரியான விலை கிடைக்காததால் மா விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் நிலைமை சீராகவில்லை. தற்போது சர்வதேச அளவில் நிலவும் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்யப்படும் மாம்பழக் கூழ்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு தேக்கமடைந்த கையிருப்பு ஒருபுறம் இருக்க, தற்போது நிலவும் அசாதாரணச் சூழலால் சர்வதேசச் சந்தையில் இந்திய மாம்பழக் கூழுக்கான மவுசு குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்றுமதி முடங்கியுள்ளதால், உள்ளூர் சந்தையில் பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதா அல்லது வரத்து குறைவால் விலை உயருமா என்ற இரட்டைச் சங்கடத்தில் விவசாயிகள் உள்ளனர். கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், குளிர்பானத் தயாரிப்பாளர்களும் மாம்பழக் கூழ் தட்டுப்பாட்டை நினைத்துக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!