மார்கழி சிறப்பு.. திருப்பாவையில் துயில் எழும் ஏழுமலையான்... திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!
உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மட்டும் வழக்கமான வழிபாட்டு முறைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
மார்கழியில் திருப்பாவை சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் காலங்காலமாக நடைபெறும் வழக்கம் சுப்ரபாத சேவைதான். ஆனால், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதம் இசைக்கப்படாது. சுப்ரபாதத்திற்குப் பதிலாக, ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் ஒவ்வொரு பாடலாக நாள்தோறும் காலையில் இசைக்கப்படுகின்றன.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில், ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்களைக் கேட்டுத்தான் ஏழுமலையான் துயில் எழுவதாக ஐதீகம் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்திற்கெனத் தனி வழிபாட்டு அட்டவணைகளே உள்ளன.
அதிகாலை திருப்பாவையுடன் தொடங்கும் இந்த மார்கழி மாத மாற்றம், இரவு ஏகாந்த சேவை வரை தொடர்கிறது. இடையே இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதம் முதல் ஒவ்வொரு கால பூஜைகளிலும் மார்கழி மாதத்தின் சிறப்புகள் வந்து சேர்கின்றன. இந்த மாதத்தில் நடைபெறும் அலங்காரங்களின்போது, ஆண்டாளுக்குரிய சிறப்பான கிளிகளும் இடம்பெறுமாம்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஆண்டாள், ஆழ்வார்களில் பூமாதேவியின் அம்சம் என்று சிறப்பிக்கப்படுபவர். ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களில், தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் பாவித்துப் பாடிய பாசுரங்களுக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு. பெருமாளுக்கு அணிவிக்க, பெரியாழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலைகளை, அவருக்குத் தெரியாமல் ஆண்டாள் முதலில் சூடிப் பார்த்து அழகு பார்த்ததால்தான், அவர் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்ற பெயரைப் பெற்றார்.
இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், அழகிய மலர் மாலைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பிறகு, சித்திரை மாதம் பௌர்ணமியில் கள்ளழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போது வெங்கடேசப் பெருமாளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அணிவிக்கப்படுகின்றன. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதம் முழுக்கப் பக்தர்கள் விரதங்கள் இருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே, தனி நபர்களின் மங்கல நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவதில்லை. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் பக்தர்களும் இறையருளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!