19 வயசுல 9 கல்யாணம்.. அத்தையுடன் சேர்ந்து இளைஞர்களைத் தவிக்கவிட்ட 'கல்யாண ராணி'!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், திருமணம் ஆகாத இளைஞர்களைக் குறிவைத்துத் திருமணம் செய்து, நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிக்கு அந்தப் பெண்ணின் அத்தையே மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாகுளம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இரயிலில் கர்நாடகா சென்றுகொண்டிருந்த வாணி, விசாகப்பட்டினம் இரயில் நிலையம் வந்தபோது கழிவறை செல்வதாகக் கூறிவிட்டுத் தப்பியோடினார்.
திருமணச் செலவிற்காக மணமகன் வீட்டார் கொடுத்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் வாணி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார், தீவிரமாகத் தேடியபோது அவர் இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சந்தியா வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
மணமகன் வீட்டார் அத்தை சந்தியாவிடம் சென்று தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வாணியின் கடந்த கால லீலைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன. போலீசாரின் விசாரணையில் வாணி மற்றும் அவரது அத்தை குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தாயை இழந்த வாணி, தனது அத்தை சந்தியாவின் வளர்ப்பில் இருந்துள்ளார். சிறுவயதிலேயே வாணியைத் தனது மோசடி வேலைகளுக்குச் சந்தியா பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை இவர்கள் இதே பாணியில் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.
வாணி தலைமறைவான செய்தி பரவியதும், ஏற்கனவே அவரிடம் ஏமாந்த நாகிரெட்டி, கேசவரெட்டி போன்ற இளைஞர்கள் தங்களது திருமண வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது 9வது திருமணத்தில் சிக்கிய வாணி மற்றும் அவரது அத்தை சந்தியா ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகியுள்ளனர். இவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 19 வயதிலேயே 9 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய இந்த 'கல்யாண ராணி'யின் கதை ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!