பால் கலப்படத்தால் உயிரிழப்பு 16 ஆக உயர்வு... பகீர்!
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள லாலாசெருவு பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சோகம், ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பால் விநியோகஸ்தரிடம் பல ஆண்டுகளாகப் பால் வாங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது பெரும் சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் அந்தப் பாலை அருந்தியவர்களுக்கு அடுத்த சில நாட்களிலேயே வாந்தி, கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீர் வராமை போன்ற அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்குச் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் திடீர் மரணங்கள் குறித்துத் தடய அறிவியல் ஆய்வகம் (RFSL) நடத்திய சோதனையில், பாலில் 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) என்ற அதிபயங்கர நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுவாகத் தொழிற்சாலைகளில் குளிர்பதனப் பொருளாகப் (Coolant) பயன்படுத்தப்படுவது. நர்சபுரம் கிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பால் பண்ணையில், பாலைச் சேமித்து வைக்கும் குளிரூட்டும் இயந்திரம் (Chiller) பழுதடைந்து அதிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நச்சு அப்படியே பாலோடும், தயிரோடும் கலந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. "பால் கசப்பாக இருந்தபோதே நாங்கள் சுதாரித்திருக்க வேண்டும்" எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்தப் பால் பண்ணைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். எத்திலீன் கிளைக்கால் உடலுக்குள் சென்றால் 3 முதல் 4 நாட்களுக்குள் சிறுநீரகத்தை முழுமையாகச் செயலிழக்கச் செய்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் 72 வயது முதியவர் முதல் சிறுவர்கள் வரை அடங்குவர். மாநிலம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளில் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ள ஆந்திர அரசு, உணவுப் பாதுகாப்பு விதிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. காலையில் அருந்திய ஒரு டம்ளர் பால், 16 பேரின் வாழ்க்கையை இப்படி முடிவுக்குக் கொண்டுவரும் என அந்த ஊரே எதிர்பார்க்கவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!