நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது... மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ” நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்கிறது.
தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்.
“நீட்” நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, தேசிய அளவிலான கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்சினைகளுக்கு எதிராகக் கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
நிலைமை இவ்வாறு இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்தக் கூட்டு முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், தகுந்த உத்திகளைத் தீட்டிச் செயல்படுத்திட தங்களுக்கு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியாவில் தலைமைச் செயலகம், நாமக்கல் களிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் கடிதம் மூலம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!