1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... கதறிய மக்கள்... நடப்பாண்டில் ஆசியாவை உலுக்கிய இரண்டு சூறாவளி புயல்கள்!
நடப்பு ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த சூறாவளிப் புயல்களால் ஆசிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தத் தொடர் பேரிடர்களில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிகபட்ச இழப்பைச் சந்தித்து, நீங்காத துயரில் மூழ்கியுள்ளன.
இந்தோனேசியாவில் 'சென்யார்' புயலின் தாக்கம்: மலாக்கா ஜலசந்தியில் அரிதாக ஏற்பட்ட 'சென்யார்' என்ற சூறாவளிப் புயல், கடந்த வாரம் ஆசியாவின் ஒரு பகுதியான இந்தோனேசியாவை மிகக் கடுமையாகத் தாக்கியது. புயல் மற்றும் அதைத் தொடர்ந்த பெருவெள்ளம் காரணமாக வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 659 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ள நீர் சுனாமி போன்று காணப்பட்டது என்றும், இதுவே தனது பாட்டி கண்ட மிக மோசமான சூழல் என்றும் அசே மாகாணத்தைச் சேர்ந்த அரினி அமலியா என்ற பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளன. பலர் உணவின்றித் தவிப்பதுடன், குடிநீர், இணையதள வசதி மற்றும் மின்சாரம் இன்றி அவதியுற்று வருகின்றனர்.
இலங்கையில் 'டிட்வா' புயலின் அழிவு
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயலானது இலங்கையைச் சூறையாடியது. புயலால் ஏற்பட்ட கனமழையுடன், நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் சேர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்தது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 390 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 400 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது. வெள்ள நீரால் வீடுகள், குடியிருப்புகள் எனப் பல பகுதிகளும் சூழப்பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டில் பெய்த தொடர் கனமழையால் அந்நாட்டின் தெற்குப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 12 தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த 39 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 15 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுப் பல வீடுகள் இடிந்தன. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 181 பேர் பலியாகி உள்ளனர். சாங்கிலா மாகாணத்தில் மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவின் மொத்த இழப்பு
ஆசிய நாடுகளில் இந்தப் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களுக்கு மொத்தமாக 1,230 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளின் மேல் பகுதியில் உதவியின்றித் தவித்து வருகின்றனர். தாய்லாந்து, மலேசியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தத் தொடர் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!