மயிலாப்பூரில் நடுரோட்டில் திடீரென 5 அடி ஆழப் பள்ளம் - அலறிய வாகன ஓட்டிகள்... போக்குவரத்து மாற்றம்!
சென்னையின் பரபரப்பான பகுதிகளுள் ஒன்றான மயிலாப்பூரில், இன்று மாலை சாலையின் நடுவே திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. புத்தாண்டு தினமான இன்று வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து நேரிட்டது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென ஒரு பகுதி உள்வாங்கியது. சுமார் 5 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட இந்தப் பள்ளம், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. அதிர்ஷ்டவசமாக, பள்ளம் ஏற்பட்ட தருணத்தில் வாகனங்கள் ஏதும் அதில் சிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகச் சாலையின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சாலையின் அடியில் செல்லும் குடிநீர் அல்லது கழிவுநீர்க் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், பள்ளத்தைச் சுற்றித் தடுப்புகளை (Barricades) அமைத்தனர். பாதுகாப்பு கருதி, அந்தச் சாலையில் ஒருவழிப் பாதையாகப் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பள்ளத்தைத் தோண்டி அதன் காரணத்தைக் கண்டறிந்து, விரைந்து சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற உள்ளன.
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும், அந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒத்துழைப்பு தருமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!