பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!
'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டம் தீவிரமடையும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
திமுக தனது தேர்தல் அறிக்கையின் 311-வது வாக்குறுதியாக, "இடைநிலை ஆசிரியர்களுக்கு நிலவும் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும்" என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ (DPI) வளாகத்தில் கடந்த சில நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இன்று (டிசம்பர் 26, 2025) மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில் நிதிச் சூழலைக் காரணம் காட்டி கால அவகாசம் கோரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், "உடனடித் தீர்வு வேண்டும் அல்லது அரசாணை வெளியிட வேண்டும்" என்ற ஆசிரியர்களின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள், "அரசு தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகிறது. முறையான அறிவிப்பு வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இன்று இரவு முதல் போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும்" எனத் தெரிவித்தனர். முன்னதாக, நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நிலையிலும் ஆசிரியர்கள் அங்கேயே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
2009-க்கு முன் மற்றும் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கிடையேயான சுமார் ₹15,000 முதல் ₹20,000 வரையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல். அரசு தரப்பு: ஊதிய முரண்பாட்டைக் களைய ஏற்கனவே ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிப்பு.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!