பார்க்கிங் செய்த போது விபரீதம்... பாட்டியை நசுக்கிக் கொன்ற பேரன்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் பகுதியில், புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் பாட்டியைப் பார்க்க வந்த பேரனின் கார் ஏறி, அந்த மூதாட்டியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 70 வயது மூதாட்டியான சரளா கத்தியார் என்பவரின் பேரன், அண்மையில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 'தார்' ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அந்தப் புதிய காரில் பாட்டியின் ஆசி பெறுவதற்காக அவர் வீட்டிற்கு வந்துள்ளார். காரை வீட்டின் போர்டிகோ பகுதியில் பார்க்கிங் செய்ய முயன்றபோது, வழிகாட்டுவதற்காகப் பாட்டி சரளா உற்சாகத்துடன் முன்னே வந்து காரின் கதவைத் திறந்து விட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு தவறு, அந்த வீட்டின் மகிழ்ச்சியைப் பறித்துவிட்டது.
வீட்டிற்குள் நுழைய முயன்ற கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி (ரிவர்ஸ்) அதிவேகமாக வந்துள்ளது. இதில் காரின் பின் பகுதியில் நின்றிருந்த பாட்டி சரளா, காரிற்கும் சுவற்றிற்கும் இடையில் சிக்கி உடல் நசுங்கினார். பாட்டியின் அலறல் சத்தம் கூடக் கேட்காத நிலையில், பேரன் காரை நிறுத்தாமல் பின்னோக்கி நகர்த்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஃபதேகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரை நிறுத்திய போது 'ஹேண்ட் பிரேக்' போடாததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களுக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு சிறிய கவனக்குறைவால், ஆசையாகப் பார்க்க வந்த பாட்டியையே பேரன் காவு வாங்கிய இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கார் வாங்கிய கொண்டாட்டம், அந்த குடும்பத்தையே சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றது சோகத்தின் உச்சமாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!