இந்தியப் பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் புதிய ரூபாய் நோட்டு வெளியீடு... நேபாளத்தின் அதிர்ச்சி செயல்!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளதால், இரு நாடுகளுக்குமிடையேயான எல்லை விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. நேபாளத்தின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், இந்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ள சில இந்தியப் பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பிராந்தியங்களைத் தங்களுக்குச் சொந்தமானவை என்று நேபாளம் நீண்ட காலமாகச் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, அப்போதைய நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்தப் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைத்து ஒரு புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தை நேபாள நாடாளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது.
அப்போதே, நேபாளத்தின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மேலும், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், நேபாள அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
தற்போது, இந்த சர்ச்சைக்குரிய இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் கூடிய புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாள ராஷ்டிர வங்கி (நேபாள மத்திய வங்கி) வெளியிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளின் வெளியீடு, ஏற்கெனவே தணிந்திருந்த எல்லை விவகாரப் பிரச்னையை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளது.
இந்தியா தனது எல்லைப் பகுதிகள் குறித்து மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நேபாள அரசு ஒருதலைப்பட்சமாக வரைபடங்களை வெளியிடுவதோ அல்லது நாணயங்களில் அவற்றை அச்சிடுவதோ, தரைவழி உண்மை நிலையையோ அல்லது இந்தியாவின் உரிமையையோ மாற்ற முடியாது என்று இந்தியா தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தின் இத்தகைய செயல், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அச்சுறுத்துவதாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறை மட்டத்தில் விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!