புதிய அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம் திறப்பு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் இடப்பற்றாக்குறை காரணமாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது.
6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 கடைகள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், காத்திருப்பு கூடங்கள், பொருள் வைப்பறை, காவல் கட்டுப்பாட்டு அறை, முன்பதிவு அறைகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வறைகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது அகற்றப்பட்டது. பின்னர் நகராட்சி நடவடிக்கையின் மூலம் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!