55 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்... முட்டை விலை கடும் உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லில், முட்டை விலையானது இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று மாலை நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டுகாலத் தமிழகக் கோழிப்பண்ணை வரலாற்றில், ஒரு முட்டையின் விலை இவ்வளவு உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விலை உயர்வு நாளை (டிசம்பர் 23) காலை முதல் அமலுக்கு வருகிறது.
தொடர் விலையேற்றத்திற்கான பின்னணி: கடந்த மூன்று நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் வரை உயர்ந்துள்ளது நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது நிலவும் கடும் குளிர்காலம் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவன மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாமல் பண்ணையாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற மண்டலங்களிலும் முட்டை விலை ஏறுமுகத்தில் இருப்பதால், வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதியும் உள்நாட்டுத் தேவையும்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் ஒரு கோடி முட்டைகள் தினசரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகளில் 40 சதவீதம் கேரள மாநிலத்திற்கும், கணிசமான அளவு தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகின்றன. சத்துணவுத் திட்டத்திற்குப் போக மீதமுள்ள முட்டைகளே சந்தைக்கு வருவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதாகக் கூறப்படுகிறது.
முட்டை விலை உயர்வால் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!