அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு... ஜன.1 முதல் சம்பளம் உயர்வு... 8-வது ஊதியக் குழுவின் அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய விகிதங்கள் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது, சுமார் 1.15 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பளம் எவ்வளவு உயரும்?
தற்போது நிலவும் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2025 டிசம்பர் 31-டன் நிறைவடைகின்றன. வழக்கமாகப் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி 1 முதல் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தைத் தீர்மானிக்கும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (Fitment Factor) 2.57-லிருந்து 2.86 அல்லது அதற்கும் மேலாக உயர்த்தப்படலாம். அவ்வாறு உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 20% முதல் 35% வரை அதிரடியாக உயரும். உதாரணமாக, தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ள நிலையில், அது ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பரிந்துரை அமலாவதில் உள்ள நடைமுறை:
மத்திய அரசு கடந்த ஜனவரி 2025-இல் 8-வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முதற்கட்ட ஒப்புதலை அளித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, குழுவிற்கான அதிகாரப்பூர்வ விதிமுறைகள் (Terms of Reference) வெளியிடப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்தக் குழு, தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் பெற்றுள்ளது.
நிலுவைத் தொகை (Arrears) கிடைக்குமா?
ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 2027-ஆம் ஆண்டு வரை காலம் எடுக்க வாய்ப்பிருந்தாலும், சம்பள உயர்வுக்கான 'தேதி' (Effective Date) 2026 ஜனவரி 1-ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அரசு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டாலும், 2026 ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவைத் தொகையாக (Arrears) அந்தப் பணம் வழங்கப்படும். இது முந்தைய ஊதியக் குழுக்களின் போதும் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.
அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெறலாம் என்பதால், ஜனவரி 1-ஆம் தேதியை ஊழியர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!