கிளைமாக்ஸை எட்டிய வேட்புமனு தாக்கல்: புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்றுடன் முடிகிறது 'கெடு'!
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த நடைமுறையில், இதுவரை நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை மனு தாக்கல் செய்யாத முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களின் ஆதரவாளர்களுடன் திரளாக வந்து மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை, முதலமைச்சர் ரங்கசாமி மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை அங்கு 135-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று இறுதி முடிவுகள் எட்டப்பட்டு அந்தத் தரப்பு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது. அதேபோல், கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அங்கு நேற்று வரை 360-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்திலும் 126 தொகுதிகளுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை நேற்றுதான் இறுதி செய்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 26-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பதால், தேர்தல் களம் இன்னும் சில நாட்களில் அனல் பறக்கத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!