undefined

20 நிமிஷத்துக்கு ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழைகிறார்... அமெரிக்கா அதிர்ச்சி  தகவல்!

 

அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் விவகாரத்தில், 20 நிமிடங்களுக்கு ஒரு இந்தியர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்கக் கனவுக்காக இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோதப் பயணங்கள் உலகளவில் பேசுபொருளாகியுள்ளன. அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள், இந்த ஆபத்தான பயணங்களின் தீவிரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறையின் தரவுகளின்படி, கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23,830 இந்தியர்கள் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது பிடிபட்டுள்ளனர். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், சராசரியாக ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் பிடிபடுகிறார் என்பது தெரிய வருகிறது.


கடந்த 2024-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 85,119 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னும் முன்னிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகளில் ரோந்துப் பணிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. பிடிபடுபவர்கள் உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டு, துரிதமாக நாடுகடத்தப்படுகின்றனர். எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு அமலாக்கப் பிரிவு (ICE) தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பு மூலம் ஊடுருவலைத் தடுத்து வருகிறது. இந்தக் கடுமையான கெடுபிடிகளே 2024-ஐ விட 2025-ல் பிடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.


கடந்த 2022-ம் ஆண்டு கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 'டிங்குச்சா' சம்பவம் உலகையே உலுக்கியது. அந்தத் துயரம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்றும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது கவலையளிக்கிறது. எல்லையோரப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் கண்டறியப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க முகமைகள் எச்சரித்துள்ளன.
பிடிபடுபவர்களில் பெரும்பாலானோர் தனிநபர்களாகவும், சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் தேடும் நோக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர். "டன்கி" (Dunki) எனப்படும் இந்தச் சட்டவிரோதப் பாதைகள் மூலம் எப்படியாவது அமெரிக்காவிற்குள் நுழைந்துவிடலாம் என்ற இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, பல லட்சம் ரூபாயைச் செலவு செய்து இந்தியர்கள் இந்தப் பேராபத்தில் சிக்குகின்றனர்.
தற்போது இந்திய அரசும் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து, இத்தகைய சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்கவும், இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!