சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு 30,000 பேருக்கு மட்டுமே அனுமதி - தேவசம்போர்டு அதிரடி!
நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் மகரவிளக்கு (ஜனவரி 14) அன்று தரிசனம் செய்யப் பக்தர்களுக்குத் தேவசம்போர்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி 14, 2026 அன்று நடைபெற உள்ளது. அன்று பம்பை மற்றும் சந்நிதானத்தில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்களைக் கட்டுப்படுத்த மகரவிளக்கு தினத்தன்று 30,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்பாட் புக்கிங் வசதி அன்றைய தினம் மிகவும் குறைக்கப்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. நடப்பு சீசனின் 41 நாட்கள் நீடித்த மண்டல பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 10:10 மணி முதல் 11:30 மணிக்குள் ஐயப்பனுக்குத் 'தங்க அங்கி' அணிவிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மண்டலக் காலம் நிறைவு பெற்றது.
மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், ஜனவரி 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து 'திருவாபரண ஊர்வலமும்' நடைபெற உள்ளது.
இந்த மண்டல சீசனில் இதுவரை சுமார் 30.56 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் தேவசம்போர்டுக்கு இதுவரை ரூ.332.77 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் ரூ.35 கோடி அதிகமாகும். மகரவிளக்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நடை திறக்கும் முன்பே 12 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!