'ஆபரேசன் சாகர் பந்து'... இலங்கைக்கு 12 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா!
டிட்வா சூறாவளியால் பெரும் பாதிப்பைச் சந்தித்த அண்டை நாடான இலங்கைக்கு, மனிதாபிமான உதவியை வழங்கி, இந்தியா தனது நட்புறவை மீண்டும் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே கப்பல்கள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) 12 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நவம்பர் 17ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையும், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. இதுவரை கனமழையின் பாதிப்புகளில் சிக்கி 69 பேர் பலியாகி உள்ளனர், மேலும் 34 பேரைக் காணவில்லை என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இந்த இயற்கைச் சீற்றத்தால், சுமார் 63 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2.19 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தடையில்லா நிவாரணம் கிடைக்கவும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரி திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியக் கடற்படையின் முக்கியக் கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகியவை கொழும்பு நகரில் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.
கடற்படை உதவிக்குத் துணையாக, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே ரக விமானம் மூலம் இன்று காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கூடுதல் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்த விமானத்தில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாகச் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த அவசர உதவி, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய ஆறுதலாக அமையும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!