undefined

18 வயதைக் கடந்தவர்கள் சேர்ந்து வாழலாம்... லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை -  உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 

லிவ்-இன் (Live-in Relationship) உறவுமுறை குறித்து ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 18 வயதைக் கடந்த எந்தவொரு ஆணும் பெண்ணும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் சேர்ந்து வாழ சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என்றும், வயது வந்தோரின் தனிப்பட்ட முடிவில் அரசு தலையிட முடியாது என்றும் நீதிபதி திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 19 வயது இளைஞரும் சேர்ந்து, சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் இந்த உறவுக்கு இரு தரப்புப் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களுக்கு மிரட்டல்களையும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க உத்தரவிடக் கோரி, இந்த லிவ்-இன் ஜோடி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இளைஞருக்குச் சட்டப்பூர்வத் திருமண வயதான 21 வயது இன்னும் ஆகவில்லை. எனவே, அவர் சட்டப்பூர்வமாக லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ முடியாது" என்று வாதிட்டார். ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, திருமண வயதின் வரம்பையும், வயது வந்தோரின் வாழ்வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி பின்வரும் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார்: இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ அல்ல. இது சட்டத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்வுரிமை ஆகும்.

வயது வந்தோரின் வாழ்வுரிமையைச் சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது. ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையையோ அல்லது வாழும் இடத்தையோ தேர்வு செய்யச் சட்டப்படி உரிமை உண்டு. சட்டப்பூர்வத் திருமண வயது என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுரிமையைப் பறிக்காது. 18 வயதைக் கடந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால், அவர்களின் அந்தத் தனிப்பட்ட முடிவில் அரசு தலையிட முடியாது.

மேலும், மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு வயது வந்தோரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் அவர்கள் தங்கள் உறவைத் தேர்வு செய்யும் உரிமையை உறுதி செய்வதாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!