ஒரே நேரத்தில் சென்னை திரும்ப தொடங்கிய மக்கள்... திருச்சி நெடுஞ்சாலையில் கி.மீட்டர் கணக்கில் அணிவகுக்கும் வாகனங்கள்!
பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் அனைவரும் இன்று தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு தென் மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் கார், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்னையை நோக்கித் திரும்புவதால், ஜி.எஸ்.டி சாலை ஸ்தம்பித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கியச் சந்திப்புகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக விக்கிரவாண்டி, ஆத்தூர் (திண்டிவனம்) மற்றும் பரனூர் (செங்கல்பட்டு) ஆகிய சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், 1 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உளுந்தூர்ப்பேட்டை பகுதியில் நிகழ்ந்த தொடர் வாகன விபத்து காரணமாக நிலவிய போக்குவரத்து பாதிப்பு, தற்போது மக்கள் வருகையோடு சேர்ந்து மேலும் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்வதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகளுடன் பயணம் செய்வோர் மற்றும் முதியவர்கள் உணவகங்கள் மற்றும் கழிவறை வசதிகள் இன்றி நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் அந்தந்த மாவட்டக் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முக்கியச் சந்திப்புகளில் கூடுதல் போக்குவரத்துப் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடுவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பொறுமையுடன் செயல்படவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!