தமிழக அரசியலில் 'மெகா' திருப்பம்...  தொகுதிப் பங்கீட்டை முடிக்கச் சென்னை வந்திறங்கிய பியூஸ் கோயல்!

 

 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள பியூஷ் கோயல், இன்றைய தினமே தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தற்போது அதனை முறைப்படி இறுதி செய்யவே பியூஷ் கோயல் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தமிழகத்தில் 50 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், ஆனால் அதிமுக தரப்பு 35 முதல் 40 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சந்திப்பில் இந்த எண்ணிக்கை இழுபறிக்கு ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிக போன்ற மற்ற கட்சிகளுக்கான இடங்கள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியைத் வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணி ஒரு வலுவான ஸ்கெட்ச் போட்டுள்ள நிலையில், பியூஷ் கோயலின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் இலக்கு ஒன்றுதான்; அது திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்றுவதுதான்" எனச் சென்னை வந்தடைந்த பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் சுருக்கமாகத் தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!