விமான ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதி 2 பேர் பலி.... தரையிறங்கும் போது சோகம்!
அமெரிக்காவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. கனடாவின் மொன்றியலில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (CRJ-900) விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கிய போது அங்கிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வீரியத்தில் விமானத்தின் மூக்கு (Nose) பகுதி முற்றிலுமாகச் சிதைந்து, விமானம் ஓடுதளத்தில் ஒரு பக்கமாகச் சரிந்தது.
இந்தக் கோர விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி உள்ளிட்ட 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 100 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; இருப்பினும் சுமார் 70 பேருக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் மழை மற்றும் பனிமூட்டம் இருந்ததாகத் தெரிகிறது.
விபத்தைத் தொடர்ந்து லாகார்டியா விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ஜே.எஃப்.கே மற்றும் நெவார்க் விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. "நிறுத்து.. நிறுத்து.." என ஏடிசி (Air Traffic Control) எச்சரித்த ஆடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விபத்திற்கு மனிதத் தவறுகள் காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் எஃப்.ஏ.ஏ (FAA) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதைந்து கிடக்கும் விமானத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், விமான நிலையம் இன்று மாலை வரை மூடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!