"சீட்டாட்டம், தாயக் கட்டை...100 நாள் வேலைத் திட்டம் உழைக்காமல் திருடுவதற்குச் சமம்" - சீமான் விமர்சனம்!
மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்தும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை) குறித்துச் சீமான் கூறுகையில், "நாங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தையே ஏற்கவில்லை. அங்கு மக்கள் வேலை செய்வதில்லை; மாறாக தாயக்கட்டை ஆடுவது, பல்லாங்குழி ஆடுவது, சீட்டு விளையாடுவது மற்றும் கிளித்தட்டு ஆடுவது தான் நடக்கிறது. தூர்வாரப்பட்ட குளங்கள் எத்தனை? போடப்பட்ட சாலைகள் எத்தனை? உழைக்காமல் ஊதியம் பெறுவது ஒரு வகை திருட்டு என்று மகாத்மா காந்தி சொன்னார். அவர் பெயரிலேயே இருக்கும் இந்தத் திட்டம் அவரது கொள்கையை அவமதிப்பதாக உள்ளது" என்று சாடினார்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருகன் மாநாடு மற்றும் பிற அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆண்டு எங்கே போனீர்கள்? இப்போது மட்டும் முருகன் மீது ஏன் திடீர் பாசம் வருகிறது? தேர்தலுக்கு முன்னால் இதைக் கொண்டு வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
"அரசின் செயல்பாடுகள் வீட்டைப் பற்ற வைக்கும் தீக்குச்சி போல உள்ளது. விளக்கேற்ற நீங்கள் வரவில்லை, வீட்டை எரிக்க வருகிறீர்கள். இரு தரப்பையும் அழைத்து பேசியிருந்தால் அரை மணி நேரத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம்" என்றார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை முதலில் பயன்படுத்தியது நாங்கள்தான். எங்களது சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணக் கொடியைத் தான் விஜய்யும் பயன்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டார். "ஜனநாயகத்தில் 100% வாக்காளர்களில் 65% பேர் தான் வாக்களிக்க வருகிறார்கள். ஆட்சியாளர்கள் தற்போது தங்களுக்கான வாக்காளர்களைப் பணம் கொடுத்துத் தேர்வு செய்கிறார்கள். பொங்கல் பரிசுத் தொகை உயர்வு என்பது நமது வாக்கிற்கு விலை கூடுகிறது என்று தான் அர்த்தம். ஜனநாயகத்தின் கடைசி வாய்ப்பான வாக்குரிமைக்காகவும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என வருத்தத்துடன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!