ஓமனில் ‘வந்தே மாதரம்’ பாடி மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இன்று கையெழுத்தாகும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!
ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக நேற்று இரவு ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்தார். மஸ்கட் விமான நிலையத்தில் பிரதமருக்கு அந்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான துணைப் பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத் நேரில் வந்து சிறப்பான வரவேற்பு அளித்தார். பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அங்குத் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டு அவரை வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வந்தே மாதரம் பாடல் பாடி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது வருகை குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஓமன் நாடு இந்தியாவுடன் நீண்டகால நட்புறவையும் ஆழமான வரலாற்றுத் தொடர்புகளையும் கொண்டுள்ள ஒரு தேசம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணமானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு ஒரு புதிய வேகத்தைச் சேர்க்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தமானது கடந்த 20 ஆண்டுகளில் ஓமன் நாடு மற்றொரு நாட்டுடன் மேற்கொள்ளும் முதல் பெரிய ஒப்பந்தமாகும். ஓமன் நாட்டின் வழியாக இந்தியா தனது வர்த்தகத்தை வளைகுடா நாடுகள் (GCC), கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கு எளிதாக விரிவுபடுத்த முடியும். வெறும் வர்த்தகம் மட்டுமல்லாது, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரீக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வளைகுடா நாடுகளுடனான உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. குறிப்பாக, எத்தியோப்பியா பயணத்தின் போது இந்தியாவுக்குக் கிடைத்த உயரிய கௌரவத்தைத் தொடர்ந்து, இப்போது ஓமனுடன் கையெழுத்தாகவுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள இந்தியச் சமூகத்தினரிடையேயும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!