இந்தியாவின் அதிவேக மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | டெல்லி - மீரட் இனி 1 மணிநேரம் தான்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற விழாவில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் பிரதமர் மோடி இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
டெல்லி முதல் மீரட் வரையிலான 82 கி.மீ தூரத்தை இனி வெறும் ஒரு மணிநேரத்தில் கடக்க முடியும். 'நமோ பாரத்' ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்திலும், மீரட் மெட்ரோ ரயில் மணிக்கு 130 கி.மீ வேகத்திலும் இயக்கப்பட உள்ளன. இதுவே இந்தியாவின் அதிவேக மெட்ரோ சேவையாகும். உலகிலேயே முதன்முறையாக நமோ பாரத் (RRTS) மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய இரண்டும் ஒரே தடத்தில் பயணிக்கும் வகையில் மீரட் மெட்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
23 கி.மீ தூரம் கொண்ட மீரட் மெட்ரோ தடத்தில் 13 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழுப் பயணத்தையும் 30 நிமிடங்களில் முடிக்கலாம். தொடக்க விழாவிற்குப் பிறகு, பிரதமர் மோடி ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு வரை ரயிலில் நேரில் பயணம் செய்தார். அப்போது அவருடன் பயணித்த அதிகாரிகளிடம் திட்டத்தின் நுணுக்கங்களைக் கேட்டறிந்தவர், சக பயணிகளுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 12,930 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
தலைநகர் டெல்லியைச் சுற்றியுள்ள செயற்கைக்கோள் நகரங்களை விரைவாக இணைக்கும் மத்திய அரசின் கனவுத் திட்டமான இது, அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!