பழம்பெரும் செய்தி நிறுவனத்திற்கு சீல்... அதிரடி காட்டிய போலீஸ்!
தலைநகர் டெல்லியின் இதயப் பகுதியான ரஃபி மார்க்கில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த புகழ்பெற்ற 'யு.என்.ஐ' (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்குத் தற்போது டெல்லி போலீசார் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். கடந்த 1979-ஆம் ஆண்டு அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, நில மேம்பாட்டு ஆணையம் அந்த இட ஒதுக்கீட்டை அதிரடியாக ரத்து செய்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வந்த காவல்துறையினர், அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களைப் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அலுவலகக் கதவுகளுக்குப் பூட்டுப் போட்டனர். இதனால் அங்கு செய்திப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு செய்தி நிறுவனத்தை இப்படி முன்னறிவிப்பின்றி முடக்கியது கண்டிக்கத்தக்கது எனப் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் டெல்லியில் உள்ள ஊடகவியலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்தி நிறுவனம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்றும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை அச்சுறுத்தும் செயல் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. நில விவகாரத்தில் ஏற்பட்ட சட்டச் சிக்கலால் ஒரு தேசிய அளவிலான செய்தி நிறுவனம் முடங்கியிருப்பது, இந்திய ஊடக வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!