தேர்தல் நாளில் நெகிழ்ச்சி... தாலி கட்டிய கையோடு ஜனநாயக கடமை ஆற்றிய புதுமணத் தம்பதி!
கேரளாவில் இன்று (ஏப். 09) 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜனநாயகத் திருவிழாவில், பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த், திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். புத்தாடை மற்றும் திருமண மாலைகளுடன் தம்பதியினர் வரிசையில் நின்று வாக்களித்த காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வந்த், "தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கடந்த ஜனவரி மாதத்திலேயே எங்கள் திருமணத் தேதியை முடிவு செய்துவிட்டோம். தற்செயலாகத் திருமணமும் தேர்தலும் ஒரே நாளில் அமைந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் வெளிமாநிலத்தில் பணியாற்றி வந்ததால் கடந்த சில தேர்தல்களில் என்னால் வாக்களிக்க முடியாமல் போனது; ஆனால் இன்று என் மனைவியுடன் இணைந்து வாக்களித்தது பெருமையாக இருக்கிறது" என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
தங்களது வாழ்வின் மிக முக்கியமான நாளிலும், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்களிப்புப் பணியை மறக்காமல் செய்த இந்தத் தம்பதியினரைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். "நாங்கள் சமூகத்திற்குச் சொல்ல விரும்பும் ஒரே செய்தி இதுதான், அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதேபோல் வயநாடு உள்ளிட்ட கேரளாவின் பிற பகுதிகளிலும் மணக்கோலத்திலேயே வந்து மணப்பெண்கள் வாக்களித்த சம்பவங்கள், இந்தத் தேர்தலில் இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!