பொங்கல் நீச்சல் போட்டியில் பங்கேற்றவர் உயிரிழப்பு... குழந்தைகள் கண் முன்னே தந்தை உயிரிழப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தின் கிராமப்புறங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்குகாடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் இன்று நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார்.
கூலித்தொழிலாளியான மணிகண்டன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆனைக்காடு ரோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவைக் காணச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நீச்சல் போட்டியில் அவரும் ஆர்வத்துடன் பங்கேற்றார். பிள்ளையார் கோவில் குளத்தில் நடைபெற்ற போட்டியில், மணிகண்டன் சக வீரர்களுடன் நீந்திச் சென்றார். ஒரு கரையைத் தொட்டு விட்டு மீண்டும் தொடக்க இடத்திற்குத் திரும்ப முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவர் குளத்தின் அடியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார்.
மற்ற வீரர்கள் நீந்தித் திரும்பிய நிலையில், மணிகண்டனை மட்டும் நீண்ட நேரமாகத் காணாததால் அங்கிருந்த இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மணிகண்டனின் உடலைச் சடலமாக மீட்டனர்.
நீச்சல் போட்டியின் போது, "அப்பா.. அப்பா.." என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துத் தனது தந்தை வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்ட அவரது பிஞ்சு குழந்தைகள், பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்ணீர் விட வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!