உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் வீரர்கள் கமிஷன் தலைவராகப் பி.வி.சிந்து தேர்வு!
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பி.வி. சிந்து, உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக (Chair of the BWF Athletes' Commission) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பி.வி. சிந்து இந்தப் பொறுப்பில் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து ஏற்கனவே 2017-ம் ஆண்டு முதல் இந்த கமிஷனில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், 2020-ம் ஆண்டு முதல் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் 'இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும்' (Integrity Ambassador) அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்கள் கமிஷன் என்பது உலகெங்கிலும் உள்ள பேட்மிண்டன் வீரர்களின் உரிமைகள், தேவைகள் மற்றும் புகார்களை உலகச் சம்மேளனத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முக்கியப் பாலமாகும். சர்வதேசப் போட்டிகளின் தரம், வீரர்களின் நலன் மற்றும் விளையாட்டு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து பி.வி. சிந்து தலைமையிலான குழு ஆலோசனை வழங்கும். ஒரு இந்திய வீராங்கனை உலகப் பேட்மிண்டன் நிர்வாகத்தின் உயரிய பொறுப்புக்கு வருவது, ஆசிய அளவில் பேட்மிண்டன் விளையாட்டின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்காக 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றவர் சிந்து. உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். தற்போது நிர்வாக ரீதியிலும் அவர் கால்பதித்துள்ளது விளையாட்டு வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!