undefined

ராமர் பரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம் - திருக்கண்ணபுரம் ராமநந்தீசுவரம்!

 

திருவாரூர் மாவட்டத்தில், காவிரி வளநாட்டில், திருக்கண்ணபுரம் அருகே அமைந்துள்ள ராமநந்தீசுவரம் கோவில், ராமேஸ்வரத்திற்கு நிகரான புராணப் பெருமைகளைக் கொண்ட மிக முக்கியமான சிவ தலமாகும்.

தலத்தின் புராணப் பெருமைகள்

ராம பரிவாரங்களின் வழிபாடு: ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் (அனுமன்) உள்ளிட்ட ஒட்டுமொத்த ராம பரிவாரங்களும் சேர்ந்து வழிபட்ட பெருமை இத்தலத்துக்கு உண்டு. நந்தியின் பெருமை: ராமர் மட்டுமல்லாது, நந்தியும் சேர்ந்து சிவபெருமானைப் போற்றிய தலம் இது. இத்தலத்து ராமநந்தீசுவரரை வழிபட்டால், ஒரே சமயத்தில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவர் ராமநந்தீசுவரர்

மூலவர் ராமநந்தீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவர் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தீப ஆராதனை ஒளியில் சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவது இன்றும் நடக்கும் அதிசயமாகக் கூறப்படுகிறது. சூரியன் சிவனை இங்கு பூஜித்துள்ளார் என்பதற்குச் சான்றாக, சூரியன் தனது கதிர்களால் மூலவரைத் தழுவி ஆராதிக்கும் பாஸ்கரபூஜை இத்தலத்தில் இன்றும் நிகழ்கிறது.

ராமர் சிவபூஜை செய்த கதை

ராவணவதம் செய்த ராமர் இத்தலத்துக்குள் நுழைய முயன்றபோது, அவருக்கு அசுரஹத்தி தோஷம் இருப்பதாக அதிகாரநந்தி தடுத்து நிறுத்தியது. இதனைக் கண்ட அம்பிகை புன்னகைத்தபடியே தனது திருக்கரத்தினால் நந்தியைப் பிடித்துக்கொள்ள, ராமர் சிவபூஜை செய்து தோஷம் நீங்கப் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.

இதற்குச் சான்றாக, இத்தலத்து சோமாஸ்கந்த உற்சவ மூர்த்தத்தில் அம்பிகையின் இடக்கரத்தில் நந்தி இருப்பது வேறெங்கும் காண முடியாத அரிய அதிசயமாகும். மூலவருக்கு இடப்புறத்தில் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி சரிவார்குழலி என்ற பெயரில் அம்பிகை நிலைத்திருக்கிறாள். தமது பக்தையின் கருவைக் காத்தருளிய அருள்சக்தி இவள் என்று போற்றப்படுகிறாள்.

மாங்கல்ய பலம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டிடும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்பிகையை வழிபடுகின்றனர். தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் விமானம் இத்தலத்து விமானத்தை முன்னோடியாகக் கொண்டு கட்டப்பட்டது என்பது இதன் மற்றொரு சிறப்பாகும். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், லிங்கோத்பவர், துர்கை, கஜலட்சுமி, நவகிரகங்கள் உள்ளிட்ட கோஷ்ட தெய்வங்கள் சிவாலய முறைப்படி அமைந்துள்ளனர்.

இங்குள்ள சுப்பிரமணியர் அமைப்பிலும், அனுக்கிரக சக்தியிலும் திருச்செந்தூர் முருகனைப் போன்றவர் என்று கோயில் புராணம் கூறுகிறது. கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் ஆதீனகர்த்தர் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்ற சண்முகார்ச்சனை இங்கு விசேஷம்.

ஐப்பசி மாத கந்த சஷ்டியை முன்னிட்டுப் பத்து நாள் மகா உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. தூர்வாசர் வழிபட்ட க்ஷேத்திரபாலகர் திருமேனியும் இங்கு உள்ளது மற்றொரு சிறப்பாகும். சிவனே தல விருட்சமான மகிழ மரமாக நிலைத்திருக்கிறார். இதை வலம் செய்பவருக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமைந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவில் நன்னிலம்-நாகை வழித்தடத்தில் அமைந்துள்ள திருக்கண்ணபுரத்தின் ஒரு பகுதியாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!