சின்னசாமி மைதானத்தில் 11 காலி இருக்கைகள்! ஆர்.சி.பி. ரசிகர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி... நெகிழ்ச்சி !
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற தருணத்தில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தில் பதினொரு ரசிகர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைக் கருதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக, மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நுழைவுப் பகுதிகள் அனைத்தும் இப்போதே அகலப்படுத்தப்பட்டுப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த ஆண்டு உயிரிழந்த அந்தப் பதினொரு ரசிகர்களுக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக, மைதானத்தில் பதினொரு இருக்கைகளை எப்போதும் காலியாக வைத்திருக்கக் கர்நாடக கிரிக்கெட் வாரியம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அந்த இருக்கைகள் ஒருபோதும் யாருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது என்றும், அவை அந்த ரசிகர்களின் நினைவாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் பெயர்களைத் தாங்கிய நினைவுக்கல் ஒன்றையும் மைதான வளாகத்தில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் மீதான தீராத காதலால் உயிர் துறந்த ரசிகர்களை என்றும் நினைவில் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைதானம் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு வரும் ரசிகர்கள் இந்த நெகிழ்ச்சியான முடிவைப் பாராட்டி வருகின்றனர். வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!