ரூ.1 கோடி காசோலை மோசடி வழக்கு... மதிமுக எம்.எல்.ஏ திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சதன் திருமலை குமாருக்கு (மதிமுக), காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, 'நியூ லிங்க் ஓவர்சீஸ்' என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து சதன் திருமலை குமார் ரூ.1 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவை 'பவுன்ஸ்' ஆகித் திரும்பின.
இதையடுத்து 2019ம் ஆண்டு அந்த நிதி நிறுவனம் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
அவர் பெற்ற ரூ.1 கோடி கடனை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிதி நிறுவனத்திற்குத் திருப்பி அளிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு மாதங்களுக்குள் அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, இந்தச் சிறை தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாகச் சிறைக்குச் செல்வதிலிருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்றுள்ளது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!