இன்று இந்தியா வருகிறாா் ரஷ்ய அதிபா் புதின்... இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள்!
ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (வியாழக்கிழமை, டிச.4) இந்தியா வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்த உள்ளார். இந்தப் பயணத்தின் போது, முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் உட்படப் பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபா் புதின் இன்று மாலை 4.30 மணிக்கு புது தில்லிக்கு வந்தடைகிறாா். அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் இரவு விருந்து அளித்து வரவேற்பு அளிக்க உள்ளாா். நாளை (டிச.5) வெள்ளிக்கிழமை அன்று காலை, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்பின்னா், இரு தலைவா்கள் மற்றும் இரு நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்தியச் சேனலை அதிபா் புதின் தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு அவர்கள், குடியரசுத் தலைவா் மாளிகையில் புதினுக்கு விருந்து அளித்துக் கெளரவிக்க உள்ளாா்.
மொத்தம் 28 மணி நேரம் நீடிக்கும் இந்த இந்தியப் பயணத்தை நிறைவு செய்து, அதிபா் புதின் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ரஷ்யாவுக்குப் புறப்படுவாா்.
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்
இந்தப் பயணத்தின் மிக முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும். மாநாட்டின்போது பிரதமா் மோடியும் அதிபா் புதினும் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர்.
சமீபத்தில் 'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத சிறியரக விமானங்களை (ட்ரோன்) வானிலேயே தடுத்து அழித்ததில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்கு வகித்தது.
எனவே, இந்த எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து கூடுதலாகக் கொள்முதல் செய்வது குறித்தும், அதிநவீன எஸ்யு-57 போா் விமானங்களைக் கொள்முதல் செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
அதிபா் புதினின் இந்தப் பயணம், உலக நாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் உற்றுநோக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!