சேந்தனாரின் பக்தி: ஆருத்ரா தரிசனத்தில் திருவாதிரை 7 கறி கூட்டு செய்வது எப்படி? ஈஸியான ரெசிப்பி!
இன்று மார்கழி மாதத்தின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வான ஆருத்ரா தரிசனம். திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசனம் பெளர்ணமியன்று அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். "ஆருத்ரா" என்றால் நனைந்த அல்லது ஈரமான என்று பொருள். சிவபெருமான் ஆடல் வல்லானாக (நடராஜர்) மாறி, தனது 'ஆனந்த தாண்டவத்தின்' மூலம் உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல் ஆகிய ஐந்து தொழில்களைப் புரியும் தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதப் பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுகிறது.
சேந்தனாரின் பக்தி: திருவாதிரைக் களியும், 7 கறி கூட்டும்:
ஆருத்ரா தரிசனமான இன்று இறைவனுக்குப் படைக்கப்படும் முக்கியப் பிரசாதம் திருவாதிரைக் களி மற்றும் ஏழுகறி கூட்டு. இதன் பின்னணியில் 'சேந்தனார்' என்ற ஏழைப் பக்தரின் கதை உள்ளது. வறுமையிலும் தான் வைத்திருந்த களியை இறைவனுக்குப் படைத்த சேந்தனாரின் பக்தியை மெச்சி, இறைவன் அதனை விரும்பி உண்டதாக வரலாறு கூறுகிறது.
மார்கழி மாதம் என்பது ஆண்டின் மிகக் குளிர்ந்த காலம். இந்த நேரத்தில் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும் ஆற்றலையும் வழங்கக்கூடிய அரிசி, வெல்லம் மற்றும் சத்தான காய்கறிகள் கலந்த இந்தக் களி ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது. திருவாதிரை 7 கறி கூட்டுக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
திருவாதிரைக் களியை பச்சரிசி, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து செய்வது போல் இந்த தாளகக் குழம்பை நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்ய வேண்டும். இந்த காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் அமைவது கூடுதல் சிறப்பு.
அதன்படி தேவையான பொருட்கள்
பரங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் என அனைத்து காய்கறிகளும் சேர்ந்து மொத்தமாக 300 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புளி- எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
வெல்லம்- சிறிதளவு
வறுத்து அரைக்க
பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய்-1/4 மூடி
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1ஆர்க்கு
செய்முறை
வெறும் வாணலியில் பச்சரிசி, எள் இவைகளை வாசம் வறும் வரை வறுக்க வேண்டும். இதன் பிறகு சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய், கடலைபருப்பு, தனியா, தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். பச்சரிசியையும், எள்ளையும் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.அனைத்து காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாயுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவேண்டும்.
பாதி வெந்து வந்த உடன் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். காய்கள் நன்றாக வெந்ததும் அரைத்த விழுது மற்றும் வெல்லத்தினையும் சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். திருவாதிரை தாளகக் குழம்பு தயார். திருவாதிரைக்களியுடன் இந்த7 கறி கூட்டுக்குழம்பும் சேர்த்துப் படையல் போட வேண்டியது தான். களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடலாம். சுவையும் அபாரமாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!