தீவிர புயல் எச்சரிக்கை... நாளை இந்த 4 மாவட்டங்களில் 'அதி கனமழை'!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் இன்று (நவம்பர் 29) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை (நவம்பர் 30) நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல், அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் தாக்கம் காரணமாக, இன்று தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 30) தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது: மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலோர தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!