அதிகாலையில் அதிர்ச்சி... டீக்கடையில் மின்சாரம் தாக்கி டீ மாஸ்டர் உயிரிழப்பு... காப்பாற்ற முயன்ற உரிமையாளர் மகனும் பலி!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இன்று அதிகாலை நேரத்தில் டீக்கடை ஒன்றில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், கடையின் உரிமையாளர் மகன் மற்றும் டீ மாஸ்டர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டிப்பட்டிபங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் உணவகம் மற்றும் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று டிசம்பர் 2ம் தேதி இரவு அந்த பகுதி முழுவதும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இன்று டிசம்பர் 3ம் தேதி அதிகாலை கடையில் அலங்காரத்துக்காகத் தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் விளக்குகளில் இருந்து, டீ போடும் பட்டறைக்கு மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் மின்சாரம் தாக்கியதில், கடையில் டீ மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த பாலகுரு (50) என்பவர் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன கடையின் உரிமையாளர் மகனான ரஞ்சித் குமார் (35), டீ மாஸ்டர் பாலகுருவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது ரஞ்சித் குமார் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்து மின் தடையை ஏற்படுத்தினர். தொடர்ந்து, வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் வேலை நேரம் தொடங்கியபோது நடந்த இந்த மின் விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!