அதிர்ச்சி... துப்பாக்கி விற்பனை செய்து வந்த திமுக நிர்வாகி கைது.. வடமாநிலத் தொடர்பு அம்பலம்!
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி வருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்ற கும்பலைப் பிடித்து காவல்துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்திற்கு வடமாநிலத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் மணிவண்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மேலப்பாளையம் அக்பர் தெருவில் உள்ள அமீர் சுகைல் (24) என்பவரது வீட்டில் காவல்துறையினர் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். அங்கு ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டக்களைப் பறிமுதல் செய்தனர்.
அமீர் சுகைலிடம் நடத்திய விசாரணையில், பெருமாள்புரம் இன்ஜினியர் காலனியைச் சேர்ந்த ரத்தினம் பாலா (40) என்பவர் இந்தத் துப்பாக்கியை அவருக்குக் கொடுத்தது தெரியவந்தது. பாலா நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: ரத்தினம் பாலா இந்தத் துப்பாக்கியை சுமார் ரூ.1.25 லட்சத்திற்கு அமீர் சுகைலிடம் விற்றுள்ளார். அமீர் அதனைத் திண்டுக்கல்லைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருக்கு ரூ.1.50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். துப்பாக்கியை வாங்கிய சாகுல் ஹமீது அதனைச் சுட்டுப் பார்த்த போது, அது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், துப்பாக்கியைத் திரும்பக் கொடுத்து விட்டுப் பணத்தைக் கேட்க, அது மீண்டும் நெல்லைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் ரத்தினம் பாலா, அமீர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோருடன் சேர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகிய மொத்தம் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக நிர்வாகி ஒருவரே சட்டவிரோத துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் இப்போது துப்பாக்கி நெட்வொர்க் உருவாகியுள்ளது" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "திமுகவின் பொறியாளர் அணியே துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது" என்று அண்ணாமலையும் சாடியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!