ஆய்வில் அதிர்ச்சி... தாய்ப்பாலில் யுரேனியம்... 70% குழந்தைகளுக்கு ஆபத்து!
பீகாரில் உள்ள பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U238) என்ற கதிர்வீச்சுத் தனிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பாட்னாவின் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குழுக்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் அருண் குமார், பேராசிரியர் அசோக் கோஷ் மற்றும் டாக்டர் அசோக் சர்மா ஆகியோரின் தலைமையில், 2021 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பீகார் மாநிலத்தின் போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசாராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய ஆறு மாவட்டங்களில் வசிக்கும் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட 40 தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வுக்கு சேகரிக்கப்பட்ட அனைத்து தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செறிவு ஒரு லிட்டருக்கு 0 முதல் 5.25 மைக்ரோகிராம் வரை இருந்தது. சராசரியாக ககாரியாவில் யுரேனியத்தின் அளவு அதிகமாகவும், நாளந்தாவில் குறைவாகவும் இருந்தது. இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், பீகாரில் சுமார் 70% குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதற்கு பீகாரின் சுற்றுச்சூழல் நிலைமைகளே முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றம், மற்றும் அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சூழல் காரணிகள் ஏற்கனவே உணவுச் சங்கிலியில் ஆர்சனிக், ஈயம், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்களைக் கலக்க வழிவகுத்துள்ள நிலையில், தற்போது யுரேனியமும் கலந்துள்ளது கவலை அளிக்கிறது.
தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கு யுரேனியம் கலப்பதால் சிறுநீரக பாதிப்பு, நரம்பியல் குறைபாடு, அறிவாற்றல் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கவலையளித்தாலும், குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் அத்தியாவசியமானது என்பதால், தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீரில் யுரேனியத்தின் அளவு லிட்டருக்கு 50 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் இருப்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கனடா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளிலும் நீர் ஆதாரங்களில் யுரேனியம் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!